கோவையில் கார் வெடி சம்பவம் நடைபெற போகிறது என 18 ஆம் தேதியே மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்தும் அதன் மீது 4 நாட்களாக தமிழக காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-
தீவிரவாத செயல்பாடுகளை ஆராயக் கூடிய ஒரே தன்மை கொண்ட அமைப்பு தேசிய புலனாய்வு முகமையாகும். இந்த அமைப்பில் தமிழகத்தை சேர்ந்த 2, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். கோவை சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து என்ஐஏவிடம் அந்த கேஸ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் இப்போதாவது ஒப்படைத்தார்களே என நாங்கள் முதல்வரை வரவேற்றோம். ஆளுநர்
ஆர்.என்.ரவி கோவையில் மிகத் தெளிவாக பேசியுள்ளார். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அடிமட்டத்தில் இருக்கும் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள், வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் எதற்காக 4 நாட்கள் முடிவு எடுக்கவில்லை.
கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் என்ன சொன்னார், எங்களுக்கு 18 ஆம்தேதி கார் வெடிப்பு குறித்து எந்தவித எச்சரிக்கையும் வரவில்லை. அன்றைய தினம் மத்திய உளவுத் துறை தமிழக அரசுக்கு குறிப்பாக அலர்ட் கொடுத்தார்கள். நம் மாநில காவல்துறை அதிகாரிகள் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடவடிக்கை எடுக்கவில்லை. 21 ஆம் தேதி மாலை மாநில உளவுத் துறையானது, மத்திய அரசு அளித்த அறிக்கையில் சில தகவல்களை குறிப்பிட்டு அனைத்து காவல் துறை எஸ்பிக்களுக்கு மாநில உளவுத் துறை அந்த கடிதத்தை அனுப்பியது. 18, 19, 20, 21 ஆகிய 4 நாட்கள் மாநில உளவுத் துறை ஏன் இந்த கடிதத்தை எழுதவில்லை? 23 ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்திருக்கிறது. மத்திய உளவுத் துறையின் கடிதம் தமிழக டிஜிபியும் கோவை கமிஷனரும் தங்களுக்கு வரவில்லை என்கிறார்கள். ஆனால் மாநில உளவுத் துறை கடந்த 21 ஆம் தேதி சாயங்காலம் அனைத்து காவல் துறைகளுக்கும் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. அது ரகசியமான கடிதம். எனவே அதை தற்போது பொதுவெளியில் வெளியிடக் கூடாது.
எனக்கு சம்மன் அனுப்பினால் நான் நீதிமன்றத்தில் கடிதத்தை வெளியிடுவேன். ஆனால் அதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை சொல்ல வேண்டும். தமிழக டிஜிபியோ கோவை கமிஷனரோ எனக்கு சம்மன் அனுப்பினால் அவர்களுடைய முன்பு சென்று நான் அந்த கடிதத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் தமிழக பிரஜையாக நான் ஒரு கேள்வி கேட்பேன், அதாவது தமிழகத்திற்கு வந்த அலர்ட் மீது 4 நாட்களாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை முதல்வர் விளக்க வேண்டும். ஆளுநரும் 4 நாட்கள் என சொல்கிறார், அவர் எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என தெரியவில்லை. 4 நாட்களாக முடிவு எடுக்க வேண்டியவர்கள் ஏன் முடிவு எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.