அதிமுக பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் கால்ஊன்ற பாஜக முயற்சிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இருக்கும்வரை அது நடக்காது என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் திமுக இளைஞரணி சார்பில் திராவிட பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
திமுக கட்சி ஒன்று மட்டும் தான் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். உயிர் தியாகம் செய்வதர்களின் நினைவாக தான் மொழிப்போர் தியாகிகள் தினத்தினை திமுக கொண்டாடி வருகிறது.
தமிழகம் வரும் பொழுது மட்டும்தான் பிரதமர் மோடி திருவள்ளுவரை பற்றி பேசுவதும், திருக்குறளைப் பற்றி கூறுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழக வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் இதுவரையில் எதுவும் செய்ததில்லை. நரேந்திர மோடி இதுவரையில் வாயில் வடை சுட்டு வருகிறார். தேர்தல் வேளயைில் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுகவிற்கு எந்தவித கொள்கையும் கிடையாது. அவர்களுக்கு ஒரே கொள்கை திமுகவை எதிர்ப்பது தான். அதிமுவின் அலுவலகம் கமலாயமாக செயல்படுகிறது. சட்டசபையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் டெல்லியின் தலைமை எஜமானர்கள் ஏதாவது கூறிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதிமுக மக்களுக்காக போராட்டம் நடத்தாமல் தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கைகாக போராட்டத்தினை அதிமுகவினர் நடத்தியுள்ளனர். தற்பொழுது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை பயன்படுத்தி பாஜக கால் ஊன்றலாம் என நினைக்கிறது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தில் திராவிடமும், திமுகவும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இருக்கும் வரை தமிழகத்தில் மதவாத சக்திகளும், பாஜகவும் கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருவண்ணாமலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பள்ளியில் அவர் குத்து விளக்கு ஏற்றி வைத்தார். அதன்பிறகு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறிய மடிக்கணினியை அளித்தார்.
மேலும் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அருகே அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைக்கு கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செய்தார் அப்போது அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்பட பலர் உடனிருந்தனர்.