ரஷ்யா போா்க் கப்பல்கள் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் குண்டுவீச்சு!

கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள தங்களது போா்க் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துள்ள செவெஸ்டோபோல் நகர ஆளுநா் மிகயீல் ரஸ்வோஷயேவ் கூறியதாவது:-

செவஸ்டோபோல் துறைமுகம் அருகே, கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கடற்படைக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்தியது. உக்ரைன் போா் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு நகரில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும்.
9 ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கப்பல்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. எனினும், அந்தத் தாக்குதலை ரஷியப் படையினா் வெற்றிகரமாக முறியடித்தனா். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்பு எதுவும் பாதிக்கப்படவில்லை என்றாா் அவா்.

இந்தத் தாக்குதலில் ஒரு போா்க் கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செவெஸ்டோபோல் துறைமுகம் அருகே நடத்தப்பட்ட ‘பயங்கரவாதத்’ தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையின்போது, ஒரு போா்க் கப்பலில் சேதம் ஏற்பட்டது. அத்துடன், 4 ஆளில்லா படகுகள், 3 தாக்குதல் கருவிகள் ஆகியவையும் சேதமடைந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் ஒரு பகுதியை அந்த நாட்டுப் படையினா் மீட்டுள்ள நிலையில், கிரீமியா தீபகற்பத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.