ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு!

ஸ்வாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016 ஜூன் 24ஆம் தேதி ஸ்வாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. விரைவாக குற்றவாளிகளை கண்டறிய முதல்வர் அதிரடி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அடுத்த 7 நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஸ்வாதியை ராம்குமார் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், செப்டம்பர் 18ஆம் தேதி அன்று திடீரென மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இது அடுத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. ஸ்வாதி கொலை தொடர்பான மர்மங்கள் முழுமையாக விலகவில்லை. அதற்குள் ராம்குமார் தற்கொலையா? என சந்தேகங்கள் எழுந்தன.

இந்த வழக்கு சர்ச்சைக்குரிய வழக்காக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராம்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த ஆண்டு ஊடகம் ஒன்றின் வாயிலாக வெளியானது. அதன்படி, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான எந்தவித ஆதாரங்களும் உடலில் இல்லை என்று தெரியவந்தது. மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே ராம்குமார் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தனது மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது தந்தை புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகைகளிலும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC) தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த சூழலில் ராம்குமார் மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ராம்குமாரின் தந்தைக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிறையில் உள்ள கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பான ப்ளாஷ் செய்திகள் டிவிகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஒய்ஜி மகேந்திரன் போன்ற சிலர், பிலால் என்பவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் கொலையாளி என சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். எந்த ஒரு கொலை சம்பவத்திலும் இல்லாத வகையில் சுவாதி படுகொலை -ஆணவக் கொலை; லவ் ஜிகாத் என ஏகப்பட்ட யூகங்கள் அடித்து விடப்பட்டிருந்தன. பிலால் தொடங்கி இத்தகைய யூகங்கள் ஏன் கிளம்பின என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்காத சூழ்நிலையில்தான் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்தன. சுவாதி படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி ராம்குமார் நெல்லையில் பிடிபட்டார்; ராம்குமார் போலீசார் சுற்றி வளைப்பின் போது கழுத்தை அறுத்தை தற்கொலை செய்ய முயன்றார் என பகீர் செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம், ராம்குமாருக்கும் இந்த கொலைக்குமே தொடர்பே இல்லை என்கிற குரல்களும் வலுத்து வந்தன.

ஆனால் கைது செய்யப்பட்ட ராம்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இத்துடன் சுவாதி வழக்கின் வேகம் ஒருவித முடிவுக்கு வந்ததாக கருதப்பட்ட நிலையில் சிறையில் மின்சார ஒயரைக் கடித்துக் கொண்டு ராம்குமார் தற்கொலையும் செய்து கொண்டார் என அறிவிக்கப்பட்டு வழக்கு முடிந்து போனதாகிவிட்டது. இருந்தபோதும் சுவாதி கொலையில் என் மகனுக்கு தொடர்பு இல்லை; வேண்டும் என்றே என் மகனை கொலையில் சிக்க வைத்து சாகடித்துவிட்டனர் என்ற ராம்குமாரின் தாயாரின் குமுறல் ஓயவில்லை. அவர் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டார். தற்போது, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது

மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த உத்தரவால் சுவாதி படுகொலை வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சுவாதி படுகொலை தொடர்பாக விலகாத மர்ம முடிச்சுகள் இனியேனும் வெளிவருமா? உண்மை குற்றவாளி ராம்குமார்தானா? என்பதெல்லாம் இனி அம்பலத்துக்கு வரும்.