சீன கடன் செயலிகளால் பேராபத்து: மத்திய அரசு எச்சரிக்கை!

சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. கொடுக்கும் கடன் தொகைக்கு அதிகளவில் வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பதுடன், பல கோடி ரூபாய் சீனா சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது.

இந்தநிலையில் சீன கடன் செயலி சம்பவங்களில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘சட்ட விரோத கடன் செயலிகளால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் தொடர்புடைய கடன் செயலிகள் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. எனவே, இந்த செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய சைபர் குற்ற தடயவியல் ஆய்வுகூடத்தின் சேவையை பெற்று கொள்ளலாம். இதுபோன்ற செயலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.’ என கூறப்பட்டுள்ளது.