மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது, மாநிலங்களுக்கு ஆளுநர் தேவைதானா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் பற்றி ஆளுநர் ஆர்என் ரவி பேசிய கருத்துக்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக கடுமையான எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநர் ஆர்என் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்திலோ அல்லது பாஜகவிலொ இணைந்து கருத்துக்கள் பேசலாம் என்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து அறிக்கை வெளியிட்டன.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டி.ராஜா கூறுகையில், குஜராத் மாநிலத்தில் பாலம் தகர்ந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பங்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பாலம் எப்படி தகர்ந்தது என்று குஜராத் மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, பிரேசில் நாட்டில் இடதுசாரியான லுலு டா சில்வா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தென் அமெரிக்கா நாடுகளில் தொடர்ந்து இடதுசாரிகள் சார்பு அரசு ஆட்சி அமைத்து வருகிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-
பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு என்பதை நாம் மறுத்துவிட முடியாது. சனாதனக் கொள்கையை நிலை நிறுத்தி மதவெறியை மக்கள் மீது திணிக்கிறது. பாஜகவை ஆட்டுவிப்பதே ஆர்எஸ்எஸ் இயக்கம் தான். மோடி வளர்ச்சி குறித்து ஆயிரம் பேசலாம். ஆனால் அவையாவும் வாய்ஜாலங்கள் தான். அவருடைய தவறான கொள்கையால் இந்தியாவில் பொருளாதாரம் நிலைகுலைந்துள்ளது. உலக அளவில் மக்கள் அதிகமாக பசியால் வாடுவது இந்தியாவில் தான். மோடியின் ஆதரவாளர்களான அதானியும் அம்பானியும் யார் பணக்காரர் என உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்திய மக்கள் பசியாலும் பட்டினியாலும் வேலையின்மையாலும் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய மக்கள் இந்த அளவிற்கு பாதிப்புக்குள்ளானதற்கு ஆர்எஸ்எஸ்-யின் மதவெறி கொள்கை தான் காரணம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்குமா என்பதை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி உள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டுமானால் பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். ஆகவே மதசார்பற்ற ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை விவகாரம் பற்றி கேள்விக்கு, கோவை சிலிண்டர் வெடிப்பில் மாநில அரசை இழிவுபடுத்துவதை ஏற்க இயலாது. மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆளுநரின் கருத்து வெளிப்பாடு பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சமீப காலங்களாக ஆளுநர் நியமனங்கள் அரசியல் நியமனங்களாக நடைபெற்று வருகிறது. எனவே தான் ஆளுநர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்களாக நடக்கின்றனர்
தமிழகத்தில் மட்டுமல்ல கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்களின் செயல்பாடுகளை நாம் பார்த்து வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, ஆளுநர்கள் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் பதவியில் இருந்து விலகிவிட்டு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதை எதிர்கொள்ளலாம்.
அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்ட பொறுப்பில் இருந்து கொண்டு சனாதனத்தை தூக்கி பிடிப்பது ஏற்புடையதல்ல. பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார் விலகி ஒரு மகா கூட்டணி அமைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார். பீகாரில் நடந்ததைப் போல அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைைய வேண்டும் என்று தெரிவித்தார்.