பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர்!

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆட்சியர்களிடம் முதல்வர் பேசியதாவது:-

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும். மிக கனமழை பெய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை முன்னதாகவே தருவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொலைபேசி, வாட்ஸ்ஆப் வாயிலாக வரக்கூடிய புகார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை கண்டறிந்து அப்புறுப்படுத்த வேண்டும். வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. மழைக்காலம் சவாலான காலம், அதை மக்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.