கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் மொழிப்போர் வெடிக்கும்: சீமான்

கட்டாய இந்தியை மத்திய அரசு மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் பெரிய மொழிப்போர் வெடிக்கும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு சந்துக்குள் கூட்டம் போடமாட்டேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எச்சரித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அதன்பிறகு அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நாம் தமிழர் கட்சியும் அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு செய்தார். அதன்படி வரும் தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதியான இன்று சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் இருந்து நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் நாம் தமிழர் கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அவர்கள் அனைவரும் பேரணி சென்றனர். கையில் இந்திக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். பேரணியின்போது மழை பெய்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் நடந்து சென்றனர்.

இந்நிலையில் சீமான் பேசியதாவது:-

மொழிகள் அழிந்துள்ளது. சமஸ்கிருத திணிப்பின்போது 1800 ஆண்டுகளுக்கு முன்பு தமிழோடு சமஸ்கிருதம் கலந்து பேசி 1600 ஆண்டுகளுக்கு முன்பு கன்னடம், தெலுங்கு மொழிகள் பிரிந்தன. வணக்கம் என்பதை நமஸ்காரம் என பேசி பிரிந்துவிட்டனர். மொழிக்கலப்பில் தமிழினம் சிதைந்து அழிந்துவிட்டது. இன்று ஆங்கிலம் கலந்து பேசி தமிழங்கிலம் பேசி வருகிறோம். 90 சதவீதம் வரை ஆங்கிலம் கலப்பு உள்ளது. அதேபோல் இந்தி வருகிறது. இந்தி வந்தால் தமிழ் மொழி அழிந்துவிடும். மொழி அழிந்தால் பண்பாடு அழிந்துவிடும். பண்பாடு அழிந்தால் இனம் அழிந்துவிடும். இனம் அழிந்தால் நாடு அழிந்துபோகும்.

கோதுமை வந்து சிறுதானியத்தை அழித்துவிட்டதுபோல் தான் இந்தி வந்து தமிழ் மொழியை அழித்துவிடும். தேசிய இனத்தின் மொழி மீது ஒற்றை மொழியை திணித்து அழிப்பது என்பது எவ்வளவு பெரிய துரோகம். இதனை எப்படி ஏற்றுக்கொள்வோம். எப்படி பொறுத்துக்கொள்வது. அதனால் கட்டாய இந்தியை மத்திய அரசு ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டும். கைவிட்டுவிட வேண்டும். அது மிகப்பெரிய மொழிப்போரை இந்த நிலத்தில் எங்களை முன்னெடுக்க தூண்டும். அப்போது சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு சந்துக்குள் கூட்டம் போடுவதை எல்லாம் நான் செய்யமாட்டேன். நாம் ஒப்புக்கு கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து போராடவிடல்லை. உளமார போராடுகிறோம். ஏனென்றால் நாம் தூயதமிழ்தாயின் பிள்ளைகள் நாம். நாம் எழுச்சியும், புரட்சியுமாக திரண்டு வந்துள்ளீர்கள். அன்னை தமிழ் காக்கும் புரட்சி ஒருபோதும் முடியாது.

வெள்ளளைக்காரர்கள் நம்மை ஆண்டதால் ஆங்கிலம் தொடர்பு மொழியாக மாறிவிட்டது. தற்போது இந்தியாவுக்குள் இந்தியை தொடர்பு மொழியாக்க வேண்டும் என்கின்றனர். இந்தியாவை விட்டு வெளியே சென்றால் எந்த மொழியில் தொடர்பு கொள்வது. இந்தியாவுக்குள் இந்தி தான் ஆளும் மொழி என்றால் என் தாய் மொழி என்னவாகி விட்டது?. இந்தியாவில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தபோது காயிதே மில்லத் தொண்மையான தமிழ் மொழி தான் இருக்க வேண்டும் என பேசினார். இதனை நினைவில் வைத்து கொண்டு இந்தி மொழி திணிப்பை கைவிட்டு விட வேண்டும்.

மத்திய அரசு ஏன் இந்தியை கையில் எடுக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. நான் கொடுத்த காசு, தமிழ் கொடுத்த காசு வைத்து கொண்டு தமிழ் படிக்க முடியாது என்றால் என்ன சொல்வது. இந்த நிலமும், அதிகாரமும் என்னிடம் வரும்போது இந்தியை கொண்டு வர விடமாட்டோம். அவரவர் தாய்மொழி அவர்களுக்கு. இந்தியை கொண்டாடுங்கள். அதற்கான நிலத்தில், மாநிலத்தில் வைத்து கொண்டாடுங்கள். அங்கு இந்தியில் படியுங்கள். என் இனத்தில் வந்து இந்தி எனும் சேட்டையை நடத்த கூடாது. என் இனத்தில் வந்து இந்தி எனும் சேட்டையை நடத்த கூடாது.

இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்கின்றனர். அப்படி என்றால் 2 கோடி பேர் இங்கு வந்து சோன்பப்டி, சொட்டர் விற்பனை செய்து கொண்டு திரிகின்றனர். சாப்பாட்டுக்கு மேஜை துடைத்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் உழைப்பை விட்டு, வேலையை விட்டு நாம் வெளியேறிவிட்டதால் அதற்கான இடத்தில் வடஇந்தியர்கள் வந்துவிட்டனர். இதனால் தமிழ் இனம் ரொம்ப தெளிவாக இருக்க வேண்டும். உழைப்பை விட்டு வெளியேறக்கூடாது. வெளியேறிவிட்டால் நிலம் பறிபோகிவிடும். ஏனென்றால் இங்கு வேலைக்கு வருபவர்களுக்கு வேலை கொடுப்பதோடு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை வழங்குவார்கள். 2 கோடி பேர் வாக்குரிமை பெற்றுவிட்டால் இந்த நிலத்தின் அரசியல், அதிகாரத்தை அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். வாக்குரிமை கொடுக்க கூடாது நாம் அரசியலற்ற, அடிமை மக்களாக மாற்றப்படுவோம். சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுவோம். ஈழத்தில் இந்த நிலை நிகழ்ந்தபோது இங்கு அவர்கள் வர தாய்நிலம் இருந்தது. இங்கிருந்து அடித்து விரட்டினால் எங்கு செல்வாய்?. எச்சரித்து கொள்ள வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வடஇந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க கூடாது. நிலத்தை இழந்தால் வளத்தை இழப்போம். வளத்தை இழந்தால் இனத்தை இழப்போம். இதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையில் நேற்றிரவு முதலே பெருமழை பெய்து வருகிறது. காலையில் இருந்தும் மழை விட்டு பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. அடாது மழை பெய்தாலும் சீமான் தலைமையில் விடாது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பேரணியில் ஏராளமானோர் கையில் குடையுடன் பங்கேற்றனர்.