மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் குவிந்த அரசியல் தலைவர்கள்!

மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் அரசியல் தலைவர்கள் பலரும் குவிந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது

மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்குவங்க மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமாகவும் பதவி வகித்து வருபவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன். இவரது மூத்த சகோதரர் இல.கோபாலனின் 80ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த், பாஜக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த சதாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றே சென்னை வந்துவிட்டார். விமான நிலையத்தில் அவரை திமுக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் அகியோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து நேராக முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி அவரை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, இன்று காலை விழா மண்டபத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி, விழாவிற்கு வருபவர்களை வரவேற்பதற்காக நுழைவு வாயிலில் கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற செண்டை மேளத்தை வாசித்தார். விழா முழுவதுமே மம்தா பானர்ஜி மிகவும் உற்சாகமாகவே காணப்பட்டார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழகத்திலும் ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பல்வேறு புகார்களை வாசித்து வருகின்றனர். மேற்குவங்கத்திலும் ஆளுநராக இருந்த தற்போதைய குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்தார். கேரளாவிலும் இதே நிலைதான் எனும்போது, ஆளுநர் ஒருவரின் இல்ல விழாவில் இரு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டது கவனம் ஈர்த்துள்ளது.

திமுகவுடன் நட்பு பாராட்டக் கூடியவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2019இல் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள், பாஜக எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைவது பற்றி தேசிய அளவில் விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி – ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர் இல.கணேசன். அவரது இல்ல விழாவில் பாஜக பிரமுகர்கள், ஒத்த சிந்தனையுடையவர்கள் கலந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. ஆனால், பாஜக எதிர்ப்பு கொள்கைகளில் மிகத்தீவிரமாக இருக்கக் கூடிய மம்தாவும், ஸ்டாலினும் விழாவில் கலந்து கொண்டது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில், மேற்குவங்கத்தில் பொறுப்பு ஆளுநராக இருக்கும் இல.கணேசனுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே சுமூக உறவே உள்ளது. அதேபோல், மறைந்த கலைஞர் கருணாநிதி குடும்பத்துடனும் கட்சி தாண்டி நட்புறவையே இல.கணேசன் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே, மம்தா, ஸ்டாலின் ஆகிய இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்கின்றனர்.

மூன்றாவது அணி உள்ளிட்ட நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜகவுக்கு சாதகமாக அமையும் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்கு இந்த விழா பாலமாக அமைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு, ‘அதெல்லாம் கிடையாது. இது முழுக்க முழுக்க குடும்ப விழா. இதில் அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கின்றனர் இல.கணேசனுக்கு நெருக்கமானவர்கள்.

திருமணம் செய்துகொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காகவும், பாஜகவிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பொது வாழ்வில் இறங்கியவர் இல.கணேசன். சித்தாந்த ரீதியாகவும், கட்சிக் கொள்கைகளின் அடிப்படையிலும் தமிழக அரசியல் தலைவர்களுடன் இல.கணேசன் முரண்பட்டாலும், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என அனைவருடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அன்புடன் பழகக் கூடியவர். கண்ணியமாக பேசி பழகும் பண்புடையவர். எனவே, அவரது இல்ல விழாவில் கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.