மோர்பி விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்: ஒவைசி

குஜராத்தில் நடந்த விபத்து பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்துப் பேசிய ஒவைசி, ‘மோர்பியில் நடந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. இது குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சிக்கு உதாரணம்’ என்று கூறினார். மேலும், ‘குஜராத்தில் பாஜகவின் தவறான ஆட்சியால், கொரோனா காலத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு பணவீக்கம் உள்ளது, வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு குரல் கொடுக்கவும் தலைமையை உருவாக்கவும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். குஜராத் தேர்தலில் இந்த பிரச்னைகளை நாங்கள் எழுப்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, குஜராத் மாநிலம் மோா்பியில் உள்ள மச்சு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 135 போ் உயிரிழந்தனா். 100 பேர் காயமடைந்தனர். காணாமல் போன இருவரின் உடல் கடந்த இரு நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில் அனைவரது உடல்களும் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.