சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு தர ஒப்புக் கொண்ட மத்திய அரசு!

டெல்லியில் தமது இல்லத்தில் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதால் அரசு பங்களாவை நாளை மறுநாள் காலி செய்து ஒப்படைப்பதாக பாஜகவின் முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் இணைந்தார். பின்னர் ராஜ்யசபா எம்.பி.யானார். இருந்த போதும் மத்தியில் ஆளும் பாஜக அரசை இடைவிடாமல் விமர்சித்தும் வந்தார். சுப்பிரமணியன் சுவாமி தமக்கு மத்திய அரசில் அமைச்சர் பதவி; ஆலோசகர் பதவி ஏதேனும் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் மத்திய பாஜக அரசு, சுப்பிரமணியன் சுவாமியை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர்களையும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்தார். தமிழக பாஜகவுக்கு ஜனதா கட்சியில் இருந்து தம்முடன் பாஜகவில் இணைந்த சந்திரலேகாவுக்கு தலைவர் பதவியை அவர் எதிர்பார்த்தார். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்பதால் தமிழக பாஜகவை விமர்சித்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் முடிவடைந்தது. ஆனால் டெல்லியில் அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி வெளியேறாமல் அடம்பிடித்தார். அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். அதில், டெல்லியில் உள்ள தமது சொந்த இல்லத்தில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டிருந்தார். இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், சுப்பிரமணியன் சுவாமியின் சொந்த இல்லத்தில் பாதுகாப்பு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைப்பதாக சுப்பிரமணியன் சுவாமி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.