திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே ஆளுநர் எதிர்ப்பு: டாக்டர் கிருஷ்ணசாமி!

இந்தி திணிப்பு ஆளுநர் எதிர்ப்பு இந்த இரண்டையும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே கேடயமாக எடுத்திருக்கிறது என புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து புதிய தமிழக கட்சி சார்பில் செயல் வீரர் கூட்டம் புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகம் எதிரே திமுக அரசை கண்டித்து மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக புதிய தமிழக கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:-

திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்யப்படும் எனவும் கூறியது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. திராவிட மாடல் என கூறும் திமுக சொல்லில் மட்டும் இல்லாமல் செயலிலும் செய்ய வேண்டும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசு மின் கட்டணத்தை மத்திய அரசின் அழுத்தம் காரணமாக உயர்த்தி உள்ளது என கூறுவது சொத்தை காரணத்தை காட்டுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் திமுக அதிமுக மீது சாட்டப்பட்ட குற்றங்களை தற்போது திமுக ஆட்சி வந்ததும் சரி செய்து விட்டார்களா? ஆவினில் நடைபெறும் முறைகேடு காரணமாகவே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் கொள்முதல் விலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

சென்னையில் மழை வந்தால் பாதிப்பு வரும் என தெரிந்தே ஏன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக அரசு நாளுக்கு நாள் தோற்றுக் கொண்டு இருக்கிறது. கனிமவள கொள்ளையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் ஊராட்சி மன்ற தலைவர்கள் வரை ஈடுபட்டிருக்கின்றனர். சட்டவிரோதமாக டாஸ்மாக் கடை அருகே பார் நடத்துகின்றனர். திமுக ஆட்சியில் எல்லாமே குளறுபடியாக வாக்குறுதிக்கு எதிராகவே நடக்கிறது. பழைய பென்ஷன் திட்டம், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை இப்படி எந்த பிரச்சினைக்குமே தீர்வு வராமல் இவர்களுக்கு எப்பவாவது ஒரு சாக்குப் போக்கு வேண்டும் என்பதற்காகவே இந்தி எங்கே வருகிறது, எதில் திணிக்கப்படுகிறது. திணிக்கப்படுவதாக ஒரு கற்பனையை உருவாக்கினார்கள். இதே போல் இந்தி திணிப்பு ஆளுநர் எதிர்ப்பு. இந்த இரண்டையும் திமுகவின் தோல்வியை மறைப்பதற்காகவே கேடயமாக எடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.