வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். வாரணாசி:
தமிழகத்துக்கும், உத்தரபிரதேசத்துக்கும் குறிப்பாக வாரணாசிக்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத கால நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘காசி-தமிழ் சங்கமம்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்வுகள் வருகிற 16-ந் தேதி தொடங்குகின்றன. இந்த சங்கமத்தில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி-தமிழ் சங்கமத்தின் நோக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சியின் அறிவுசார் பங்குதாரர்களாக சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் செயல்படும். அத்துடன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இந்த நிறுவனங்கள் இயங்கும். இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 2,500 பேர் கலந்து கொள்வார்கள். அவர்கள் காசி விஸ்வநாத்துக்கும், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.
பாரதிய பாஷா சமிதி அல்லது இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரக்குழு, தமிழ் கலாசாரத்துக்கும், வாரணாசிக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டாடுகிறது. இந்தியா நாகரிக இணைப்பின் சின்னம் ஆகும். இரண்டு வரலாற்று மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிக சொத்துகளில் உள்ள ஒற்றுமையை புரிந்து கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். தமிழ்நாடு மற்றும் வாரணாசி இடையேயான பரந்த உறவின் நோக்கம் இரு அறிவு மற்றும் கலாசார மரபுகளை நெருக்கமாக கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியம் பற்றிய புரிதலை உருவாக்குவதும், இரு பகுதி மக்களுக்கு இடையேயான பிணைப்பை ஆழமாக்குவதும் ஆகும். வாரணாசியில் பல ஆண்டுகளை கழித்த சுப்பிரமணிய பாரதியார் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.