காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை: பிரதமர் மோடி

காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் கங்கரா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-

ஹிமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலிமையான அரசு உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில், இரட்டை என்ஜீன் சக்தி மற்றும் வலிமையான அரசு அமைந்தால், மாநிலம், அனைத்து சவால்களில் இருந்தும் மீண்டு வருவதுடன் பல சாதனைகளை படைக்கும். நிலையற்றதன்மை, ஊழல், முறைகேடு ஆகியவற்றிற்கு மட்டும் தான் அக்கட்சி உத்தரவாதம் அளிக்கும். அக்கட்சியால் நிலையான அரசை வழங்க முடியாது. அதற்கு அக்கட்சியும் விரும்பாது. காங்கிரஸ் 2 மாநிலங்களில் சுருங்கியுள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே அக்கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலங்களில் வளர்ச்சி குறித்து எந்த செய்தியும் வருவது இல்லை. மாறாக உட்கட்சி பூசல் குறித்த செய்திகள் மட்டுமே வருகின்றன. பிளவுபட்ட காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

வாரிசு அரசியலில் இருந்து மக்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மீண்டும் தோல்வியடைந்தால், அக்கட்சியால் மீண்டும் வரவே முடியாது. பல மாநில மக்கள் காங்கிரசை ஆதரிக்க தயாராக இல்லை. பல மாநிலங்களில் அக்கட்சியால் ஒரு எம்எல்ஏ. கூட பெற முடியவில்லை.
உத்தரகாண்ட் மக்களும், பழைய பாரம்பரியத்தை மாற்றி பா.ஜ.,வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். உ.பி.,யிலும், கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சி செய்த கட்சி தொடர்ந்து 2வது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மணிப்பூரிலும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.