திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் திகழ்கிறது. பல புகழ்களை தன்னகத்தேக் கொண்ட திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதேபோல் கோயிலில் உள்ள சிலைகளுக்கான பாதுகாப்பு காரணமாக புகைப்படம் எடுக்க பல்வேறு கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயில்களில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பதன் மூலம் சில திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் புராதண கோயில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா என்று கேள்வி எழுப்பியதோடு, கோயிலில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. கோயில்கள் பொழுது போக்கும் சுற்றுலா தலம் அல்ல. கோயில்களுக்கு வரும் பக்தர்கள், டவுசர், அரைகால் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவது வருத்தமளிக்கிறது என்று கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் முருகன் கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க வேண்டியது நமது கடடையாகும். இதனால் திருச்செந்தூர் கோயிலுக்குள் அச்சகர்கள் உள்பட பக்தர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தடை உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தினால், பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் திருப்பி ஒப்படைக்கக்கூடாது. கோயிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டத் தடையை, உடனடியாக அறநிலையத்துறை அமல்படுத்துமாறும், இதுகுறித்து அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.