மறைந்த கோவை தங்கம் குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் கோவை புறப்பட்டுச் சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சமீபத்தில் மறைந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கம் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோவை தங்கம் குடும்பத்தாரிடம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

கோவை தங்கம், சில காலம் மட்டுமே திமுகவில் பணியாற்றிய நிலையிலும், தமிழக முதலமைச்சரே நேரில் வந்து ஆறுதல் கூறியதால் நெகிழ்ந்துபோன கோவை தங்கத்தின் குடும்பத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அதற்கு, எனக்கு எதுக்கு நன்றி, நான் தான் கோவை தங்கத்திற்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன், நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம். தைரியமா இருங்க என உருக்கமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏவாக இருந்தவர் கோவை தங்கம். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தமாகா மாநில துணைத் தலைவராகவும் இருந்தார். 2021 சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகாவுக்கு வால்பாறை தொகுதி ஒதுக்காததால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்து தமாகாவில் இருந்து விலகினார். பின்னர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் கோவை தங்கம். திமுக கூட்டணி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அவர் மறைவுற்ற நிலையில், அவருக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

கோவை தங்கம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு கரூர் செல்லும் அவர் அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை காலை 10 மணிக்கு அரவக்குறிச்சி பகுதியில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாளை பிற்பகலில் திண்டுக்கல் செல்லும் மு.க.ஸ்டாலின், சின்னாளபட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை சென்று விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.