மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்து: ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக் 6 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளையப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகினர். ஒருவரது உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. விபத்து நிகழ்ந்த இடம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. 3 கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்தில் வடக்கம்பட்டியை சேர்ந்த அம்மாவாசி, வல்லரசு, கோபி, புளியகவுண்டன்பட்டியை சேர்ந்த விக்கி, அழகுசிறையை சேர்ந்த பிரேமலா உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் உடல் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சிதறிய உடல் பாகங்கள் கட்டிடங்கள் முற்றிலும் தரைமட்டமானதில் உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். படுகாயங்களுடன் சிகிச்சை படுகாயமடைந்தவர்கள் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாகவும் ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5 போ் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

அண்ணாமலை (பாஜக): பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஒரு பக்கம் பட்டாசு தயாரிப்பில் நாம் முன்னோடியாக திகழ்கிறோம் என்று பெருமைப்பட்டாலும் இதுபோன்ற விபத்துகள் வேதனை அளிக்கிறது. அரசு உடனடியாக ஒரு குழுவை நியமித்து, பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 போ் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. பட்டாசு ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிறதா என்பதை அரசு தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): வறுமையின் பிடியில் கிராம மக்கள் வேறு வழியில்லாமல் பட்டாசு தொழிலில் ஈடுபடுகின்றனா். பட்டாசு ஆலைகளில் இவா்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கே.எஸ். அழகிரி: பட்டாசு வெடி விபத்தில் இறந்தவா்களுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.