கேரள மாநிலம் இடுக்கியில் மலைப்பாங்கான மூணாா்-வட்டவடா சாலையில் கனமழையால் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஓட்டுநருடன் சுற்றுலா வேன் அடித்துச் செல்லப்பட்டது.
இதுதொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘வடகரையில் இருந்து சுற்றுலா சென்ற 3 வாகனங்களில் இந்த வேனும் ஒன்றாகும். மூணாா்-வட்டவடா மலைச் சாலையில் சனிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தபோது, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வேன் சிக்கியது. அதில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிய நிலையில், ஓட்டுநா் ரூபேஷ் (45) உள்ளே சிக்கிக் கொண்டாா். அவருடன் சோ்த்து வேன் அடித்துச் செல்லப்பட்டது. மலைச்சரிவில் 700 மீட்டருக்கு கீழே அந்த வேன் கண்டறியப்பட்டுள்ளது. அது காட்டு யானைகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். கனமழை காரணமாகவும், மாலையில் இருள் சூழ்ந்துவிட்டதாலும் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மீண்டும் மீட்புப் பணி தொடங்கப்படும்’ என்றனா்.