மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி

கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை எஸ்.பி.வேலுமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள 87வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்தது. எப்போது மழை பெய்தாலும் இப்பகுதியில் மழைநீர் தேங்கும். இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க பாதாள சாக்கடை கொண்டு வரும் திட்டம் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தான் மழைநீர் தேங்கி நிற்கிறது. அதற்கு உதாரணமாக குனியமுத்தூரில் உள்ள 87, 88 ஆகிய வார்டுகளை பார்க்கலாம். அதிமுக ஆட்சியில் மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறு இல்லை. பாதிப்புளை பார்வையிடுவது பற்றி மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தேன். ஒரு அதிகாரி கூட வரவில்லை. இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பிற்கு ஆளாகியுள்ளனர். இனியாவது சரி செய்ய வேண்டும்.

கோவையை பொறுத்தவரை எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளன. அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகளை ரத்து செய்துள்ளனர். அரசிடம் நிதி இல்லை என்று சொல்லக் கூடாது. கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் அவர்கள் பணிகளை செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். மழையால் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் செய்த பணிகள் மக்களுக்கு தெரியும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல் மக்கள் அவரைப் பாராட்டவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. திமுகவின் கூட்டணி கட்சிகள் வேறு வழியின்றி இருக்கிறார்கள். சென்னையில் இதுவரை புதிதாக பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. அங்கு மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு நாங்கள் செய்த பணிகளே காரணம். மழைநீர் வடிகால் நாங்கள் கட்டியது. தற்போது லேசான மழைக்கே சென்னை தாங்கவில்லை. எனவே டிவியில் விளம்பரம் செய்து நடிக்காமல் திமுக அரசு சரியாக வேலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.