சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் அண்மையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சந்தேகிக்கப்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தொடர்ந்து விவாதங்களை எழுப்பி வந்தது. இந்நிலையில் கோவையில் சமூக நல்லிணக்க பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. இதற்கு கோவை மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து கோவை குனியமுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி. அப்போது அவர் கூறியதாவது:-
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தையொட்டி கோவையில் அமைதியை தொடர்ந்து நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கில் வரும் 17 ம் தேதி கோவையில் சமூக நல்லிணக்க அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் மாநகர காவல்துறை அனுமதி வழங்க மறுத்து வருகிறது. எந்த அடிப்படையில் அனுமதி மறுக்கிறீர்கள் எனவும் விளக்கம் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். நாளை மறுதினம் அனுமதி மறுத்தால், வேறு தேதி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். தொடர்ந்து அனுமதி மறுத்தால் உள்துறை செயலரை சந்தித்து முறையிடுவோம்.
தமிழக அரசு மாதம் ஒரு முறை மின் அளவீடு செய்யும் முறையை அமலாக்க வேண்டும். இல்லையென்றால் இது தொடர்பாக தொடர் போராட்டம் நடத்துவோம். அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைப்போம். அதேபோல பீக் ஹவர்ஸ் சதவீதம் குறைப்பு ஒருபோதும் தொழில் நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படாது. இது ஒரு ஏமாற்று வேலை.
தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்டக் கழகத்தின் TANTEA தரமானது. மார்க்கெட்டிலும் நல்ல விலை போகக் கூடியது. இந்த தேயிலை தோட்டங்களில் இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் வால்பாறையில் 600 குடும்பங்களின் வேலைவாய்ப்பைப் பறிக்க, கூடலூரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தேயிலை தோட்டக் கழகம் நட்டத்தில் இயங்குகிறது என்கிறார்கள். இது தவறான காரணம். அப்படியல்ல, நிர்வாக சீர்கேடு தான் இதற்குக் காரணம். நிர்வாகத்தை சரி செய்து தேயிலை தோட்ட கழகத்தை முழுமையாக இயக்க வேண்டும். தேயிலை தோட்ட கழகத்தை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.