வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகிறது: ஸ்டாலின்

வன விலங்குகளைப் பாதுகாப்பதில் அரசு ஆழ்ந்த மன உறுதியோடு இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் உள்ள 147 பெரிய உயிரியல் பூங்காக்களில் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பதை குறிப்பிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் இந்த சாதனைக்காக நான் அத்துறை அதிகாரிகளை வாழ்த்த விரும்புகிறேன். கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு காலங்களில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பூங்காவிற்கு வருமானம் இல்லாதபோது, உயிரியல் பூங்காவின் பராமரிப்பிற்காக அரசாங்கம் ரூபாய் 6 கோடியை ஒதுக்கியது. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளைக் கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் எடுத்த இந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரவலாகப் பாராட்டப்பட்டன.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, உலகத் தரம் வாய்ந்த சில உயிரியல் பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு, முழுமையான இயற்கைச் சூழலில் வாழ்வதற்கு ஏற்றாற்போல் இந்தப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் உயிரியல் பூங்காக்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு ஆரோக்கியமான சூழலை வழங்குவது மட்டுமன்றி, வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் வயதானவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு உகந்த வசதிகளை பூங்கா நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் பூங்கா நிர்வாகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவைத் தவிர, வேலூர் மாவட்டம் அமிர்தியிலும், சேலம் குரும்பப்பட்டியிலும் தமிழ்நாடு அரசு உயிரியல் பூங்காக்களை அமைத்துள்ளது. இந்த உயிரியல் பூங்காக்களில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். வன உயிரின வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. வன உயிரின பாதுகாப்பில் தமிழகத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தேவாங்கு காப்பகம் அமைக்கப்பட உள்ளது. யானைகளை கண்காணித்து பாதுகாப்பதற்காக ரூ.2.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வன விலங்கு உள்ளிட்ட பல்லுயிர் தமிழகம் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வனவிலங்குகள் மற்றும் வனஉயிரினப் பூங்காக்களில் உள்ள வன விலங்குகளைப் பாதுகாப்பதில் நாங்கள் ஆழ்ந்த மன உறுதியோடு இருக்கிறோம். இந்த நடவடிக்கைகளில் தொடர்புடைய அனைவரும் முனைப்பான ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.