ராஜீவ் காந்தி கொலையாளிகள் முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்; அவர்கள் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் முதலில் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி உள்ளிட்ட 6 தமிழரும் நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்ததால் விடுதலை செய்யப்பட்டனர். சிறையில் இருந்து தற்போது 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். இவர்களில் முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயாஸ் ஆகியோர் ஈழத் தமிழர்கள். ஆகையால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 4 ஈழத் தமிழரையும் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கை. இது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில், முருகன் உள்ளிட்ட 4 ஈழத் தமிழரும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர். 4 பேரும் விரும்பும் நாடு ஒன்றுக்கு செல்லலாம். இவர்கள் 4 பேரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.