கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கால்பந்து வீராங்கனையும் மாணவியுமான பிரியா மரணம் தொடர்பாக சுகாதாரத் துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், மாணவி மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, வியாசா்பாடியைச் சோ்ந்த பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர். மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு, வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் அப்பெண்ணின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது. எனினும், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.15) உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், மாணவி பிரியா மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரங்கள் அவகாசமும் வழங்கியுள்ளது. மாணவி பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, காவல் துறை விசாரணை போன்றவை அறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.