என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது: ஹேமந்த் சோரன்

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒரு முதல்வரின் மீது மிகவும் எளிதாக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைக்க முடிகிறது என்று எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது என என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார்.

நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக, இன்று (நவ.,17) விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிருந்தது. இந்நிலையில், தன் மீதான சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டு வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று(நவ.,17) ஆஜராவதற்கு முன்னர், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஒரு முதல்வரின் மீது மிகவும் எளிதாக இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைக்க முடிகிறது என்று எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அமலாக்கத்துறைக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில், ஒட்டுமொத்த மாநிலத்தில் இருந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு சுரங்கங்களில் இருந்து கிடைத்த மொத்த ராயல்டி தொகையே ரூ.750 கோடி என்பதை தெரிவித்துள்ளேன். பின்னர் எப்படி அவர்கள் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஜார்க்கண்டின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இதுவரை மறைமுகமாக சதி நடந்து வந்தது தற்போது அது வெளிப்படையாகத் தெரிகிறது.

நான் ஒரு முதல்வர் என்ற அரசியல் சாசன ரீதியிலான பொறுப்பை வகிக்கிறேன். ஆனால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது நான் நாட்டை விட்டு தப்பி ஒடிவிடவேன் என்று நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அமலாக்கத்துறை தனது விசாரணையை எந்த உள்நோக்கமும் இல்லாமல் நேர்மையாகவும், உண்மையாகவும் நடத்தும் என்று நம்புகிறேன். சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் எனது கடமைகளை ஒரு சிறந்த குடிமகனாக தவறாமல் நிறைவேற்றுவேன் என்று நான் உறுதிமொழி எடுத்துள்ளேன். என் மீதான சம்மனுக்கு விளக்கம் அளிக்க நான் இன்று விசாரணைக்கு ஆஜராகிறேன். நாட்டின் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராவதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்ததப்பட்டுள்ளது.