அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது: அமைச்சர் துரைமுருகன்!

கனிம வளக்கொள்ளை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளது உப்பு சப்பில்லாத அறிக்கை என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த் ,ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1,248 பயனாளிகளுக்கு ரூ.15. 41 கோடி கடன் உதவியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கூட்டுறவுத் துறையில் மக்கள் வாங்கிய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தால் எப்படி அரசு நடக்கும். பயிர்கடன், கால்நடை கடன் மாற்றுத்திறனாளிகள் கடன் இப்படி வாங்கிய அனைத்து கடனையும் எப்படி ஒரு அரசால் தள்ளுபடி செய்ய முடியும். இந்த எண்ணம் வரக்கூடாது தமிழக அரசு சரியாக நடக்க வேண்டும் என்றால் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்த வேண்டும். எப்படி இருந்தாலும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நிலைமை வந்துவிடக் கூடாது. கடனை திருப்பி கட்டும் நல்ல உணர்வோடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

தென்பென்னை ஆறு நீர் பகிர்வு குறித்து 4 வாரங்களில் ஆணையம் அணைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறை செயலாளர் டெல்லி சென்றுள்ளார். அவர் வந்த பின்னர் அதை பற்றி கருத்து தெரிவிக்கிறேன். தமிழகத்தில் தவறுகள் நடந்தால் நாங்கள் கேட்க அதிகாரம் உள்ளது என தமிழக கவர்னர் ரவி கூறி உள்ளார். பாவம் கவர்னர் அவர் எதையாவது சொல்லுவார். தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அது உப்பு சப்பில்லாதது. அவர் ஆதாரப்பூர்வமாக தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.