மேற்குவங்க புதிய ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமனம்!

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்தவர் ஜகதீப் தன்கர். மேற்கு வங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மமதா பானர்ஜி அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்தவர் தன்கர். பின்னர் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். தற்போது நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார் ஜகதீப் தன்கர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் ஆளுநர் பொறுப்பை மணிப்பூர் ஆளுநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன் நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் இணக்கமான போக்கை இல.கணேசன் கடைபிடித்தார். இதனால் சென்னையில் நடைபெற்ற இல.கணேசன் இல்ல நிகழ்ச்சிக்கு அண்மையில் மமதா பானர்ஜி வருகை தந்திருந்தார்

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய முழுநேர ஆளுநராக சிவி ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் கோட்டயம் மாவட்டம் மன்னானம் என்ற இடத்தில் பிறந்த சிவி ஆனந்த போஸ் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. 1951-ம் ஆண்டு பிறந்த சிவி ஆனந்த போஸ், மேகாலயா மாநில அரசுக்கான ஆலோசகர் பதவியில் இருக்கிறார். கேரளாவில் முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு ஆலோசகராக பதவி வகித்தார் ஆனந்த போஸ். பின்னர் 2019-ம் ஆண்டு பாஜகவில் அதிகாரப்பூர்வமாகவும் இணைந்தார். மாவட்ட ஆட்சியர் முதல் தலைமை செயலாளர் பதவி வரை பணியாற்றியவர் ஆனந்த போஸ். தற்போது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். சி.வி. ஆனந்த போஸை மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.