அடிக்கு அடி என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்: பிரதமர் மோடி

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‘No Money for Terror’ என்ற தலைப்பில் டெல்லியில் இன்றும், நாளையும் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் பல நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

தீவிரவாதத்துக்கு எதிராக ஒரு மாநாட்டை நடத்துவதற்கு இந்தியாவுக்கு அதிக தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன். ஏனெனில், தீவிரவாதத்தின் கோர முகத்தை உலகம் பார்ப்பதற்கு முன்பாகவே அதை பார்த்த நாடு இந்தியா. எண்ணற்ற தீவிரவாத தாக்குதல்களின் வடுக்களை இந்தியா தனது நெஞ்சில் தாங்கியுள்ளது.
அந்தக் காலக்கட்டத்தில் இருந்தே தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வந்தது. ஆனால், தீவிரவாதத்தை சந்திக்காத பல நாடுகள் அப்போது இந்தியாவின் பேச்சுக்கு பெரிதாக செவிசாய்க்கவில்லை. ஆனால், அவரவர் நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகுதான் அவர்களுக்கு இந்தியாவின் குரல் கேட்டது. இன்று கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல தசாப்தங்களாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் ஒருபோதும் அதற்கு இந்தியா அடிபணிந்ததில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக தீரமாக சண்டையிட்டு வருகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை, தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு கொள்கைகளை தான் பின்பற்றுகிறது. ஒன்று, தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு வீழ்த்துவது. இரண்டாவது, தீவிரவாதிகள் எப்படி பேசுகிறார்களோ அதே பாணியில் அவர்களுக்கு பதிலளிப்பது. இந்த இரண்டு கொள்கைகளை வைத்து தான் தீவிரவாதத்துடன் நாங்கள் போராடுகிறோம். தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்.

தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமெனில், முதலில் அதற்கு கிடைக்கும் நிதி ஆதாரத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் இந்தியா முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட நாடுகள் மட்டும் தீவிரவாதத்தை எதிர்த்தால் போதாது. பிற நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும். சில நாடுகள் (பாகிஸ்தான்) இருக்கின்றன. அவை தீவிரவாதத்தை ஆதரிப்பதையும், அவற்றுக்கு நிதியுதவி வழங்குவதையுமே தங்கள் வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்கின்றன. வேறு சில நாடுகள் (சீனா) இருக்கின்றன. அவை தீவிரவாதிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை தடுப்பதே வேலையாக வைத்திருக்கும். இவை மறைமுகமாக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். இதுபோன்ற நாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைமை மாறியுள்ளது, அல்கொய்தா மற்றும் ஐஎஸ் அமைப்புகளின் செல்வாக்கு பிராந்திய பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்ததன் பின்னணியில், ஆப்கானிஸ்தானில் தலிபானின் அதிகார எழுச்சியால் உலகம் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக அமெரிக்க இரட்டை கோபுர கொடூர தாக்குதலை நாம் அனைவரும் பார்த்தோம். தெற்காசியப் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாற்றங்கள் நம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

அல்கொய்தாவுடன், தெற்காசியாவில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற அமைப்புகளும் தொடர்ந்து பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றன. பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களையோ அவர்களின் வளங்களையோ நாம் ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் மற்றும் ஆதரிப்போரின் இரட்டைப் பேச்சையும் நாங்கள் உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.