டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் விடியோ வெளியானது தொடர்பான சிறப்பு நீதிமன்றம் நாளை திங்கள்கிழமை விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2017-ஆம் ஆண்டில் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ எப்ஐஆா் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், பணமோசடி வழக்கில் சத்யேந்தா் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. மேலும், அவருடன் தொடா்புடையதாகக் கூறப்படும் நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணமோசடி வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், அவரின் மனைவி உள்ளிட்டோரை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்ட சத்யேந்தர் ஜெயினுக்கு சிறைக்குள் மசாஜ் செய்யும் விடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் சட்டவிரோதமாக சிறையின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்யேந்தர் ஜெயின் தரப்பில் அமலாக்கத்துறைக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சத்யேந்தர் ஜெயினின் வழக்குரைஞர் சிறையின் சிசிடிவி காட்சிகள் எப்படி பாஜகவினருக்கு கிடைத்தது? இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.