பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி: ஆர்.பி.உதயகுமார்

நடப்பாண்டு பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான தேதி நீட்டிப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி என அரசு அறிவித்திருந்தது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளும் நேரிலே சென்று அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இந்த ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டு தொகையை மாநில அரசே அந்த காப்பீட்டு தொகையான பிரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும், இந்த அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ஆம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவம்பர் 21க்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடியார் அறிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

மாநில முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன இதை எதிர்கட்சித் தலைவர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்ல கடந்தாண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை, வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுப்பு நடத்த தவறியதால் கணக்கெடுப்பில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பல பகுதிகள் கணக்கெடுப்பில் விடுபட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டு விவசாயிகளிடமிருந்து பரவலாக தெரிவிக்கப்பட்டதையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சுட்டிக் காட்டினார்.

பயிர் காப்பீட்டு கட்டணமோ ஒரு ஏக்கருக்கு ரூபாய் 300. ஆனால் திமுக அரசு பயிர் காப்பீட்டு நிவாரணமாக பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏக்கர் வீட்டுக்கு ரூபாய் 250 மட்டுமே பெற்று தந்துள்ளது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தனர். இப்படி அரைகுறையாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிலே இதுவரை 80 சதவீத விவசாயிகளுக்கு சென்ற ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு நிவாரணம் இன்று வரை வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கண்ணீருடன் கவலை தெரிவித்து வருகின்றனர். இன்றைக்கு செயல்படாத திமுக அரசு, முடங்கிக் கிடக்கிற அரசு, கும்பகர்ணன் போல் தூக்கிக்கொண்டு இருக்கிற அரசு.

மக்கள் கோரிக்கையாக, மக்களுடைய உணர்வுக்காக, மக்களுடைய தேவைகளுக்காக, மக்களுடைய நலனுக்காக, மக்களுடைய நன்மைக்காக, மக்களுடைய வாழ்வாதாரத்திற்காக, எதிர்காலத்திற்காக மக்களுடைய பாதுகாப்பதற்காக தமிழ் மொழிக்காக, தமிழ் இனம் காக்க,தமிழ் மண் காக்க, தமிழக மக்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தூங்கிக் கொண்டிருக்கிற திமுக அரசை இன்றைக்கு எழுப்புகிற அந்த நடவடிக்கையிலே முதன்மை போர் வீரனாக ராணுவ வீரனாக முதன்மைக் களப்போராளியாக, இருந்து பிரதான எதிர்க்கட்சி தலைவராக அவர் ஆற்றுகிற அந்த மகத்தான பணிக்கு கிடைத்த பல வெற்றிகளிலே, இன்றைக்கு கிடைத்திருக்கிற நவம்பர் 21 வரை பயிர் காப்பீட்டுத் தொகையை நீட்டிப்பதற்கு கிடைத்த வெற்றி ஆகும். இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.