மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்புடையது: டிஜிபி

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்தது. தொடர்ந்து ஆட்டோவும் தீப்பிடித்து எரிந்தது. அதில், ஆட்டோ டிரைவரும், பயணியும் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த ஆட்டோ டிரைவர் மங்களூருவை சேர்ந்தவர் என்றும் , பயணி மைசூரில் தங்கி இருந்த இவரது பெயர் பிரேம்ராஜ் என்றும் தெரியவந்துள்ளது. இவரது அறையில் இருந்து போலி ஆதார் கார்டு, சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்றும், காஸ் அடுப்பு போல் உள்ள பொருள் ஒன்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டோவில் வெடிகுண்டு எடுத்து செல்லப்பட்ட போது வெடித்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் கமிஷனர் சசிகுமார் நேரடியாக விசாரணை நடத்துகிறார். சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், காயமடைந்த பயணியிடமும் விசாரணை நடத்தினார். அந்த பயணி, சம்பவம் குறித்து முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோ எரிந்த இடத்திற்கு சென்ற மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்தது என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் வெளியிட்ட அறிக்கையில், ஆட்டோ விபத்து தற்காலிகமானது அல்ல. ஆனால், பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனக்கூறியுள்ளார்.

கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் குண்டுவெடித்தது. இது விபத்து என பேசப்பட்டது. ஆனால், பயங்கரவாத தொடர்புடையது என விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதேபோல், மங்களூருவில் ஆட்டோவில் குண்டுவெடிக்க வைக்கப்பட்டுள்ளது.