என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருமாவளவன் கூறியதாவது:-
என்எல்சி-க்கு நிலம் வழங்கியவர்களுக்கு பணி மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்.எல்.சி நிர்வாகம் முன்வைத்த ஆலோசனையை பொதுமக்கள் ஏற்கவில்லை. ஏக்கருக்கு ரூ.25 லட்சம் தருவதற்கு முன்வந்தது. ஆனால் ஒரு சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு பழுப்பு நிலக்கரியை என்.எல்.சி நிர்வாகம் வெட்ட இருக்கிறது. நாங்கள் நிலங்களை பறிகொடுத்து நிர்கதியாகும் நிலையில் இருக்கிறோம். எங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் நிலையில் இருப்பதால் எங்களுக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதும் ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முதன்மையான கோரிக்கைகளாக மக்கள் வைக்கிறார்கள்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் தோழமை கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதில் முதல்வர் தலையிட வேண்டும். ஏனென்றால் மாவட்ட ஆட்சித்தலைவர்தான் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்கிறார். என்.எல்.சி இந்தியா என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனம். ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசின் மாவட்ட ஆட்சி நிர்வாகம்தான் மேற்கொள்கிறது. முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு செய்கிற சூழலில், இதில் முதல்வருக்கும் கணிசமான அளவில் பங்களிப்பு இருக்கிறது. அவர் தலையிட வேண்டிய தேவை இருக்கிறது. எனவே முதல்வரின் (முக ஸ்டாலினின்) கவனத்திற்கு இதை எடுத்துச்செல்வோம். முடிந்தால் அவரை நேரில் சந்தித்து அவரின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்ப்போம். முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவோம்.
இந்தப்பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினை. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், இதனை நாடாளுமன்றத்திலும் எழுப்புவேன். சந்தர்ப்பம் கிடைத்தால் மத்திய அமைச்சரையும் சந்தித்து பேசுவோம். இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் 1-வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்யும் பணியை மேற்கொள்ள நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மந்தாரக்குப்பம் அருகே கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 3-வது வார்டுகளில் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு அந்தப் பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வாய்ப்பும் கொடுத்தால் மட்டுமே எங்கள் நிலத்தை கையகப்படுத்த முடியும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.