அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி!

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில எல்லையில் மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இன்று இரு மாநில எல்லையில் நிகழ்ந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்துடன் மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் ஆகியவை மாநில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அண்மையில் அஸ்ஸாம், மேகாலயா இடையேயான எல்லை பிரச்சனை உக்கிரமாக வெடித்தது. கடந்த ஆண்டு அஸ்ஸாம், மேகாலயா மாநில போலீசார் இடையே பெரும் மோதல் நடந்தது. அப்போது இருதரப்பும் எல்லை யுத்தம் போல துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் பலியாகினர். இதனால் மேகாலயா மீது அஸ்ஸாம் பொருளாதார தடை விதித்தது. இதன்பின்னர் இரு மாநில எல்லை பிரச்சனையில் மத்திய பாஜக அரசு தலையிட்டது. ஒருவழியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இரு மாநில முதல்வர்கள் பங்கேற்ற எல்லை தீர்வு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு இரு மாநில முதல்வர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

தற்போது மீண்டும் அஸ்ஸாம், மேகாலயா மாநில எல்லையில் மோதல் வெடித்துள்ளது. அஸ்ஸாமில் இருந்து மேகாலயா நோக்கி மரக்கட்டைகளுடன் லாரி ஒன்று இன்று காலையில் சென்று கொண்டிருந்தது. இதனை அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனால் லாரி ஓட்டுநர் தப்பி செல்ல முயன்றார். இதனையடுத்து அஸ்ஸாம் வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அத்துடன் 3 பேரையும் அஸ்ஸாம் வனத்துறையினர் சிறைபிடித்தனர். இந்த தகவல் மேகாலயா மாநிலத்தில் காட்டுத் தீயாக பரவியது. இதனையடுத்து பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அஸ்ஸாம் வனத்துறையினரை சூழ்ந்து கொண்டது. அப்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அக்கும்பல் வலியுறுத்தியது. இதனால் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 6 பேர் பலியாகினர். இதனால் அஸ்ஸாம்- மேகாலயா எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இரு மாநில காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மேகாலயாவில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை காரணமாக சமூக ஊடகங்களின் சேவையை எல்லையோர 7 மாவட்டங்களில் நாளை மறுநாள் காலை 10.30 மணிவரை முடக்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.