ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-3 ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் வலுவான ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவம் இருக்கிறது. சீனாவுக்கு அடுத்து அதிகப்படியான வீரர்களைக் கொண்ட ராணுவமாக இந்திய ராணுவம் இருந்து வருகிறது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நவீன ராக்கெட் சோதனைகளைப் பாதுகாப்புத் துறை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி-3 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் சோதனை வெற்றிகரமாக இருந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வழக்கமான ராக்கெட் சோதனை நிகழ்வின் போது இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த ராக்கெட் லான்ச் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ராக்கெட்டின் அனைத்து செயல்பாடுகளும் சரியாகவே இருந்து உள்ளது” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
அதிநவீன வசதிகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அக்னி-3 ஏவுகணை எதிரியை இடைமறித்துத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டதாகும். அக்னி ஏவுகணைகள் இந்தியாவில் அணு ஆயுதங்களைத் தூக்கிச் செல்லும் ஆற்றல் கொண்ட முக்கிய ராக்கெட்களாக பார்க்கப்படுகிறது. இதில் பிரித்வி குறுகிய தூர ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களும் அடங்கும். அதேபோல நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்த் கப்பலில் இருந்து ராக்கெட் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.