நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

கச்சத்தீவு அருகே பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக அபாண்டமாக குற்றம்சாட்டுகிறது இலங்கை. எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக 800 தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளது இலங்கை. தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளது. தற்போது வரை தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது இலங்கை. இதனை எந்த ஒரு மத்திய அரசும் இதுவரை தட்டி கேட்டது இல்லை.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 2,500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இது தமிழரின் பாரம்பரிய மீன்பிடி பகுதி. தமிழக மீனவர்களை கண்டதும் சுற்றி வளைத்தது இலங்கை கடற்படை. மேலும் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து அப்பகுதியில் இருந்து மீனவர்களையும் விரட்டியடித்தது. இதனால் உயிரை கையில் பிடித்தபடி ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

இதனிடையே இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தொடர்பாக விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வட மாகாணத்தை வளைக்கும் நோக்கில் சீனாவை தொடர்ந்து பாகிஸ்தானும் களமிறங்கி உள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினார். யாழ்ப்பாணம் பொதுநூலகத்தையும் அவர் பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் பயணமாக உமர் பாரூக் புர்கி சென்றுள்ளார். யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பரையும் புர்கி கண்காணித்தார் எனவும் கூறப்படுகிறது. மேலும் புர்கியின் இந்த பயணத்தை முன்னிட்டே வழக்கத்தைவிட கூடுதலான கடற்படை மன்னார் வளைகுடாவில் களமிறக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டது.

சீனா, பாகிஸ்தான் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்ற மமதையில் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களைக் கண்டதும் விரட்டியடித்தும் வலைகளை அறுத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கிறது.