பிரதமர் மோடியின் 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது: ஒவைசி

குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அசாதுதீன் ஒவைசி, வாக்குறுதி அளித்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், அந்த 2 கோடி வேலைவாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது என்றும் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி என தேசிய தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் எம்.பி ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. சிறுபான்மை வாக்குகளை பிரித்து பாஜகவின் பி டீம் போல ஓவைசி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் விமர்சனங்கள் முன்வைத்தாலும் ஓவைசி கட்சி போட்டியிட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் மட்டும் என 14 தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது.

ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஓவைசி தனது தேர்தல் பிரசாரத்தில் கூறியதவாது:-

நாட்டில் வேலை வாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. நான் அண்மையில் ஹோட்டல் ஒன்றில் இளைஞர் ஒருவரை சந்தித்தேன். என்னிடம் அந்த இளைஞர் வேலை வாய்ப்பு கிடைக்காததால் தனது வாழ்க்கையில் எதிர்கொண்டுள்ள கஷ்டங்களை கூறினார். அந்த இளைஞர் கூறுகையில், “தான் காதலித்த பெண்.. எப்போது உங்களுக்கு அரசு(இளைஞருக்கு) வேலை கிடைக்கும்.. எனது தந்தை எனக்கு மாப்பிள்ளை தேடுகிறார் என்றார். அதற்கு நானோ மோடி அரசை நம்ப வேண்டாம்.. நீ திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டேன்” என்று என்னிடம் கூறினான் என்று நகைச்சுவையாக ஓவைசி கூறினார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடிய ஓவைசி கூறியதாவது:-

கடந்த 2014 ஆம் ஆண்டில் 2 கோடி வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார். 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது 2024 ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படும் என எண்ணிக்கையை குறைத்துவிட்டார். 16 கோடி வேலை வாய்ப்புகள் தற்போது வரை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், 10 லட்சம் வேலை வாய்ப்பு என குறைத்துவிட்டார். குஜராத்தின் வளர்ச்சிக்கு பாஜக கிரெடிட் எடுத்துக்கொண்டால், மோர்பி பால விபத்துக்கு யார் காரணம் என்பதையும் பாஜக தெளிவுபடுத்த வேண்டும். 140 பேர் உயிரிழந்த மோர்பி பால விபத்தில் புனரமைப்பு பணிகளை செய்த நிறுவனத்தின் பணக்கார நபர்கள் கைது செய்யப்படவில்லை. பணக்காரர்கள் மீது மட்டும் பிரதமர் மோடி ஏன் அக்கறை காட்டுகிறார்? என்று பேசினார்.