ஜி20 தலைமைப்பதவி இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர் மோடி

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

95வது மாதத்தை எட்டியுள்ள மன் கி பாத் நிகழ்ச்சி 100வது மாதத்தை எட்ட உள்ளது. இந்திய மக்களுடன் இணைக்க இந்த நிகழ்ச்சி முக்கியமானது. ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ளதற்கு பெருமை அளிப்பதாக ஏராளமானோர் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலகத்தின் நன்மை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும். இந்த பிரச்னைகள் தொடர்பான சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. இந்த மாநாட்டிற்கு ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ‘ என்ற மையக்கருத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சக்திவாய்ந்த கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க போகிறது.

ஆளில்லா விமான துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த நவ.,18 ல் ‘விக்ரம் எஸ்’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட போது இந்தியா விண்வெளித்துறையில் புதிய தடம் பதித்துள்ளது. இந்த ராக்கெட் தனியார் துறை மூலம் உருவாக்கப்பட்டதுடன், ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று, இந்தியா மற்றும் பூடான் நாடுகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் அதிக ‘ரெசல்யுசன்’ படங்கள் பூடானுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியா பூடான் நாடுகளுக்கு இடையேயான வலிமையான உறவின் சின்னமாக இந்த செயற்கைக்கோள் மாறியுள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.