தேவைப்பட்டால் அரசியலில் களமிறங்குவேன்: சவுக்கு சங்கர்

அரசியலில் தேவைப்பட்டால் களமிறங்குவேன் எனவும், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடலாம் எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்

சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கர், நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர். இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை விதித்த சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து, அவர் சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு காவல் துறையில் நிலுவையில் உள்ள 4 வழக்குகளில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த வழக்குகள் கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கடலூர் சிறையில் இருந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சவுக்கு சங்கர், முதன்முறையாக தனியார் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், சிறையில் கொடுமைப்படுத்தியதன் காரணமாகத்தான் உண்னாவிரதம் இருந்தேன். சிறையில் இருந்தபோது 70 புத்தகங்களை படித்தேன். சிறைவாசத்தை கடக்க புத்தகங்கள் பெரிய உதவி புரிந்தன. பாரதியார் இருந்த சிறையில் இருந்தேன், அதனை சுட்டிக்காட்டி மிகவும் தைரியமாக இருக்க வேண்டும் என தனது தாயார் தைரியமூட்டியதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு பாதுகாப்பளித்த சிறைக் காவலர்கள் தங்களது கோரிக்கையை வெளியில் சென்று பேச வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் தனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவ தயாராக இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்லியதாகவும், அந்த தகவலை அக்கட்சியை சேர்ந்தவர்கள் தனக்கு தெரிவித்ததாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். வெளிப்படையாக உதவி செய்ய முடியாது என்பதால், வழக்கறிஞர், சிறையில் ஏதேனும் உதவிகள் வேண்டுமானால் சொல்லச் சொல்லுங்கள் என அண்ணாமலை கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடுமையான பாஸிஸ்ட்கள் என தான் விமர்சித்த பாஜகவினரே இதுபோன்று இருக்கின்றனர். ஆனால், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்தான் நாட்டின் கருத்து சிதந்திரமே இருக்கக் கூடாது என்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள் எனவும் ஆளும் திமுக அரசை மறைமுகமாக சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசும் சவுக்கு சங்கர், “நான் சினிமாவுக்கும் வரலாம், அரசியலுக்கும் வரலாம். சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதிக்கு எதிராக போட்டியிடலாம். அதிமுக எனக்கு ஆதரவளிக்கலாம். அதிமுக ஆதரவளித்தால் நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு ஆதரவளிக்கும். வெற்றி பெற்று விடுவாரா உதயநிதி? தேவைப்பட்டால் அது நடக்கும். சேப்பாக்கத்துக்கு பதில் திருவாரூரில் போட்டியிட்டால் அங்கு போட்டியிடுவேன். திருவள்ளூரில் போட்டியிட்டால் அங்கும் போட்டியிடுவேன்; பார்த்து விடலாமா?” என சவால் விடுத்துள்ளார்.

தற்போதும் தான் கலைஞரின் ரசிகன்தான் என தெரிவித்துள்ள சவுக்கு சங்கர், “திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நான் விரும்பினேன். அதற்காக நான் திமுக ஐ.டி.விங் போன்று எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்க முடியாது. அதுபோன்று நான் மாறவும் மாட்டேன். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்க முடியாது. அதனால்தான் இந்த நிலைமை” எனவும் சாடியுள்ளார்.