பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம்: மல்லிகார்ஜூன கார்கே

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. கேடா மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது என தெரிவித்தார்.

இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

நாட்டைப் பலப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் இரண்டு புகழ்பெற்ற மற்றும் உலகம் மதிக்கும் பிரதமர்களை இழந்துள்ளோம். இது மாநில சட்டசபைக்கான தேர்தல், பாராளுமன்ற தேர்தல் அல்ல. மாநிலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். அரசின் வெற்றி தோல்விகளை அவர் பேசினால் நல்லது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யாராவது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்களா? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார். இந்நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய ஜெய்நாராயண் வியாஸ் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஜெய்நாராயண் வியாசின் மகன் சமீர் வியாசும் காங்கிரசில் இணைந்தார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜெய்நாராயண் வியாஸ் காங்கிரசில் இணைந்தார். அடுத்த மாதம் தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மந்திரி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.