உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும்: சீமான்

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

சேலம் மணக்காட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலைப்புலிக்கு ஆதரவாகவும், இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 3-ல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சீமானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவர் ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இன்று சேலம் கோர்டில் சீமான் ஆஜர் ஆனார். இதையடுத்து நீதிபதி தங்க கார்த்திகா பிடிவாரண்டு தளர்த்தி, கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி வருகிற ஜனவரி மாதம் 3-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

பின்னர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் நலனில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை நீடிப்பதால் தான் கவர்னரே நமக்கு தேவையில்லை என்கிறோம். மக்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதா தாக்கல் செய்த போதும் அதில் கையெழுத்திட தாமதிப்பது எந்த விதத்தில் நியாயம். இந்த கவர்னர் வேண்டாம் என்று சொல்லவில்லை . கவர்னர் பதவியே தேவை இல்லை என்பதையே வலியுறுத்தி வருகிறோம். நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடு மொழியாக கொண்டு வரவில்லை. தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை; பிறகு எப்படி தமிழை வளர்ப்பார்கள். கோழிக்கு அதன் பாசையில் பேசி இரை போட்டு பிடித்து அறுத்து வறுப்பது போல தமிழ் மொழியில் பேசி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுங் கட்சிகள் வேண்டுமானால் மாறலாம். இலவசங்களோ ஊழலோ மாறுவதில்லை.

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேல்முறையீடு செய்தால் அதற்கும் மேல் நாங்கள் செல்வோம். எங்களுக்கும் சட்ட போராட்டம் தெரியும். வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போல் தமிழகத்தில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட தயாரா? தேர்தல் நேரத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று கூறிய தமிழக அரசு தற்போது ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆளுகின்ற திமுக தவறான பாதையில் செல்கிறதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். பாஜக ஆட்சியில் எதில் சரியாக செல்கிறது. எல்லாம் எடுத்து தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள். மக்களை பதற்றத்தில் வைத்துள்ளனர். அனைத்தும் ஆதார் தான் என்றால் தேசிய குடியுரிமைச் சான்றிதழ் எதற்காக? பாஜக ஆளும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் சரியான பாதையில் செல்கிறதா? ஏதாவது ஒன்றை கூறி வருகிறார்கள். தமிழகத்தில் இலவசத்தை தொடக்கத்திலிருந்து வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி எதிர்த்து வருகிறோம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது தான் மக்கள் அரசு, தேர்தல் நேரத்தில் அறிவித்து நாங்கள் வந்தால் இதை வழங்குகிறோம், அதை வழங்குகிறோம் என்று கூறுகிறார்கள். ஆட்சிக்கு வந்து இதை தர வேண்டியது தானே. இதுவும் ஒருவித கையூட்டு தான்.

மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில் தான் உள்ளார்கள். பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது .பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும். பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது என்று கூறுகிறார்கள். இந்த விவகாரம் அநாகரீகமானது, வருத்தம் அளிக்கிறது.

தமிழக அரசின் செயல்பாடு கேள்வி கேட்கும் அளவிற்கு உள்ளது. தமிழகத்தில் முன்பைவிட போதைப் பொருட்கள் விற்பனை கூடியுள்ளது. சட்டம் ஒழுங்கு எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பும் அளவில் உள்ளது. புதிய கல்விக்கொள்கையை நாம் எதிர்க்கிறோம். ஆனால் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டு வருகிறார்கள். இந்த இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் புதிய கல்வி கொள்கை உள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் தமிழ்நாடு தலைகீழாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.