மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு!

எலான் மஸ்க் துணை நிறுவனராக உள்ள ‘நியுராலிங்க்’ நிறுவனம், மனித மூளையில் மிகச் சிறிய கம்ப்யூட்டரை பதிக்கும் சோதனை முயற்சியில், இன்னும் ஆறு மாதத்தில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித உடலில் மிகச் சிறிய கம்ப்யூட்டர்களை பதிப்பதன் வாயிலாக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் பாகங்களின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மனித மூளையில் இந்த கம்ப்யூட்டரை பதிப்பதன் வாயிலாக, அவனது மூளையின் செயல்பாட்டை அந்த கம்ப்யூட்டர் புரிந்துகொண்டு, அதை திரையில் எழுத்துக்களாக வெளிப்படுத்தி விடும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் பலனளிக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பன்றி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளில் பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்ட நிலையில், இன்னும் ஆறு மாதங்களில் மனிதனிடத்திலும் இந்த சோதனையை மேற்கொள்ள இருப்பதாக நியுராலிங்க் அறிவித்துள்ளது.

மூளையில் மட்டுமின்றி, முதுகுத் தண்டில் பதிப்பதால், முழு உடம்பின் செயல்பாடுகளையும் மீட்கலாம்; கண் பகுதியில் பதிப்பதன் வாயிலாக, பார்வையற்றோர் பார்வை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குரங்கின் வாயிலாக ‘டெலிபதி டைப்பிங்’ செய்வதும், நிறுவனத்தால் நிகழ்த்தி காட்டப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் மனிதனுக்கும், இயந்திரங்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கான ஒரு சாதனமாக இது மாறும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கிறது. நியூராலிங்க் 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி வீடியோ கேம் விளையாடுவதைக் காண முடிந்தது. இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களை மறுவாழ்வு செய்வதிலும் நியூராலிங்கின் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்ய வைக்கமுடியும் எனக் கூறுகின்றனர். நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்.