முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதிக்கான கி. வீரமணி விருது!

முதல்வர் ஸ்டாலினுக்கு ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பெரியார் பன்னாட்டு அமைப்பு – அமெரிக்கா சார்பில் ‘சமூகநீதிக்கான கி. வீரமணி விருது’ அவ்வமைப்பின் இயக்குநர் சோம இளங்கோவனால் வழங்கப்பட்டது. இவ்விருது 1996-ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங், 1997-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சீதாராம் கேசரி, 2000-ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, 2008-ஆம் ஆண்டு கலைஞர், 2015-ஆம் ஆண்டு பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் நிதிஷ் குமார் போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழினத் தொண்டுக்காக – பகுத்தறிவு இயக்கத் தொண்டுக்காக மட்டுமல்ல, ஆசிரியர் அவர்களைத் தனிப்பட்ட முறையில் நன்றி உணர்ச்சியோடு வாழ்த்துவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறேன். அதுதான் என்னுடைய முதல் சிறை அனுபவம், அப்போது எனக்கு 23 வயது. எனக்கு முன்னால், ஆசிரியர் அவர்களும் மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள், கொட்டடியுள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அன்று, அங்கிருக்கக்கூடிய காவலர்களால் குண்டாந்தடியால் பலமாகத் தாக்கப்படுகிறேன். அப்போது என்மீது விழுந்த பெரும்பாலான அடிகளை, தன் உடம்பிலே தாங்கியவர் மறைந்த அண்ணன் சிட்டிபாபு அவர்கள். சிட்டிபாபு அவர்கள் மட்டுமல்ல, அண்ணன் ஆசிரியர் அவர்களும்தான், இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவாக இருந்தவன் நான் அடி தாங்க உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையில் இருந்தவன் நான். அப்போது என் மீது விழுந்த அடியை தாங்கி, அதன்பிறகு மனதைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன்னுயிரையும் காத்து என்னுயிரையும் காத்த கருப்புச் சட்டைக்காரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.

ஒரு சிறுவனாய் இருந்து திராவிடக் கொள்கையைப் பேசிய காலத்தில், இந்தக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய திராவிட மாடல் ஆட்சியானது அமையும் என்று ஆசிரியர் அவர்கள் நினைத்திருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தனது கனவுகள் நிறைவேறி வரும் காலத்தையும் ஆசிரியர் அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதுதான் எனக்கு மகிழ்ச்சி.

ஒரு சீர்திருத்த இயக்கம் அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, தான் பேசிய கொள்கைகளை நிறைவேற்றும், சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது இந்திய வரலாற்றில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை! இத்தகைய பெருமைக்குரிய இயக்கத்தை வழிநடத்தும் ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். ஏன், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் நான் வாழ்த்துகிறேன்.

இன்று நம்முடைய தலைவர் கலைஞர் இருந்திருந்தால், 99 வயதில் இந்த மேடையில் உதயசூரியனாய் காட்சி அளித்திருப்பார். அப்படிப்பட்ட நிலையில், 90 வயது ஆசிரியரை 99 வயது கலைஞர் அவர்கள் நிச்சயம் பாராட்டி இருப்பார். இன்றைக்கு அவர் இல்லை. கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன்.. கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.