வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்கா அறிவிப்பு!

வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது. அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.

சமீபத்தில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்த நிலையில், தற்போது அந்நாட்டின் மூன்று தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஏற்கெனவே அந்நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் தற்போது புதிய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மூலம் குறிப்பிட்ட மூன்று தலைவர்கள் அமெரிக்காவில் நுழையவும், அங்கு இவர்களுக்கு சொத்துக்கள் இருப்பின் அதனை முடக்கவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவகணைகளை தயாரிக்க இந்த மூன்று தலைவர்கள்தான் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஜோன் இல் ஹோ, யு ஜின் மற்றும் கிம் சு கில் ஆகியோர்தான் இந்த மூவர். இவர்கள் தலைமையில் உருவாகிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவையே தாக்கும் திறன் கொண்டதாகும். எனவேதான் அமெரிக்கா இவர்களுக்கு தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் இந்த மூன்று பேருடன் அமெரிக்காவில் இருப்பவர்கள் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது. அதேபோல இவர்களுடனான பணப்பரிவர்த்தனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை இருக்கும் வரை இவர்கள் மீது அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கும் என்று கூறியுள்ளது. அதேபோல யாருக்கும் தெரியாமல் இவரை கண்காணிக்க தனி குழுவையும் அமெரிக்கா உருவாக்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த தடை நடவடிக்கை தென்கொரியா மற்றும் ஜப்பான் குடியரசுடன் ஆலோசித்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வடகொரியா தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எங்களது நிலைப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று கூறியுள்ளது. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஏற்கெனவே வடகொரியா மீது அமெரிக்காவுடன் ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. காரணம் இந்த தடைகள் அந்நாட்டின் வளர்ச்சியை மந்தமாக்கும் என்று அமெரிக்கா நம்பியது. ஆனால், பக்கத்திலேயே இருக்கும் சீனாவும், கொஞ்சம் தள்ளி இருக்கும் ரஷ்யாவும் வடகொரியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து உதவி செய்து வருகிறது.