செந்தில் பாலாஜி கொலுசு கொடுத்து மக்களை ஏமாற்றினார்: வானதி சீனிவாசன்!

மாநகராட்சித் தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு கொலுசை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணியின் தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் ஏடிஎம் மெஷின்களை மக்கள் பயன்பட்டுக்கு திறந்து வைத்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அமைச்சர் செந்தில்பாலாஜியை வறுத்தெடுத்து விட்டார். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள கரூர்காரர் தேர்தலின் போது மக்களுக்கு கொலுசு கொடுத்து ஏமாற்றியவர் என செந்தில்பாலாஜி மீது அட்டாக் செய்தார். கோவை மாநகராட்சியை கண்டித்து பாஜக சார்பில் தனியாக ஒரு போராட்டம் நடத்துவது பற்றி ஒரு மாதமாக டிஸ்கஷன் நடத்தி வருவதாக கூறினார்.

கோவை மாநகராட்சியில் ஒரு குப்பையை அள்ளச் சொல்வதற்கு கூட எம்.எல்.ஏ. 4 முறை பேச வேண்டியுள்ளதாக வேதனையை பகிர்ந்த அவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள் எனக் கூறினார்.

சாலை விவகாரத்தில் கோவை மக்களுக்கு தமிழக அரசு மிகப் பெரிய துரோகம் செய்து வருவதாகவும் கோவையிலிருந்து அதிகமான வரியை பெறும் அரசு, ஒரு சாலை போடக்கூட யோசனை செய்வதாகவும் வானதி சீனிவாசன் சாடினார். கோவையின் அடிப்படை கட்டமைப்பு மிக மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் இது தான் இன்றைய கோவையின் நிலை எனவும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இதனிடையே கோவை தெற்கு தொகுதி மக்களுக்கு தாம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக வானதி பெருமிதம் தெரிவித்தார். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கார்டு மூலம் நாளொன்றுக்கு 20 லிட்டர் வரை கொடுப்பேன் எனக் கூறியதை இப்போது நிறைவேற்றியுள்ளதாகவும், ஒவ்வொரு பகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைத்து வருவதாகவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல் மொபல் அலுவலகம் அமைத்து மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று குறைகள், கோரிக்கைகளை தீர்த்து வைத்து வருவதாக தெரிவித்தார்.