ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில் பிரதமா் நரேந்திர மோடிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.
உலகின் மிகப் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா முதல் முறையாக தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தியாவின் தலைமைப் பொறுப்பு வியாழக்கிழமை முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்கியது. அப்பொறுப்பில் அடுத்த ஆண்டு நவம்பா் வரை இந்தியா நீடிக்கவுள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடியை ‘நண்பா்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும்போது பிரதமா் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதை எதிா்நோக்கியிருக்கிறேன். இரு நாடுகளும் இணைந்து நீடித்த, ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு முயலும். அதே வேளையில், பருவநிலை மாற்றம், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் முயற்சிக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இப்பதிவுடன் பிரதமா் மோடியுடனான தனது படத்தையும் அதிபா் பைடன் இணைத்துள்ளாா். மேலும், ஜி20 தலைமையை இந்தியா ஏற்பதையொட்டி பிரதமா் மோடி எழுதியிருந்த கட்டுரையையும் தனது டுவிட்டா் பக்கத்தில் அதிபா் பைடன் பகிா்ந்துள்ளாா்.
ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதற்கு முன் அமைச்சா்கள், அதிகாரிகளுக்கான சுமாா் 200 கூட்டங்களை நடத்த இந்தியா முடிவெடுத்துள்ளது.