ஜி20 மாநாடு: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லிக்கு பயணம்!

டெல்லியில் நாளை ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான தயார் நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாளை டெல்லியில் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முதன் முதலாக அறிவிப்பை வெளியிட்டார். எனவே தமிழகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது, அவர் டெல்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலையில் அவர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுவிட்டு, கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அன்றிரவே சென்னைக்கு திரும்புகிறார்.

டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டத்திற்கு வரும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் வரவேற்கிறாரே தவிர, தனித்தனியாக யாரையும் சந்தித்து பேச திட்டமிடவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே பிரதமர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இடையேயான தனிப்பட்ட சந்திப்பு நடைபெற வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

ஜி20 மாநாடுக்கு முன்பாக 32 துறைகள் தொடர்பாக 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த கூட்டங்கள் அடுத்த ஆண்டில் தொடங்க உள்ளன. கூட்டம் நடத்தப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே பூமி-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் நடத்தப்பட உள்ள ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்களை தமிழகத்தில் நடத்தும் இடங்களில் தஞ்சை, கோவை ஆகியவையும் பரிசீலனையில் உள்ளன.

இதற்கான ஆலோசனைகளை தமிழக அரசிடம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாளை டெல்லியில் நடக்கும் கூட்டத்தில், ஜி20 மாநாடு தொடர்பான கூட்டங்கள் நடக்கும் இடங்கள் பற்றி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தொல்லியல் சின்னங்களான மாமல்லபுரம் 5 ரதம், வெண்ணை உருண்டை பாறை, வேலூர் கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஜி20 என்ற எழுத்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளன. இதுபோல் இந்தியாவின் 100 தொல்லியல் சின்னங்கள் 7-ந் தேதி வரை ஒளிரூட்டப்படுகிறது.