ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம்: ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைப்பு!

ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைத்துள்ளது. ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, கத்தார், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் இன்னும் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களே பின்பற்றப்படுகிறது. மேற்குலக நாடுகள் இதுபோன்ற சட்டங்கள் உரிமைகள் பறிப்பதாகக் கூறி வருகின்றனர். இருப்பினும், இந்த நாடுகளில் தொடர்ந்து இந்தச் சட்டங்களே பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, இந்த நாடுகளில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் பெண் வளர்ச்சி தடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஈரானிலும் கூட இதேபோல பெண்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ளன. அங்கு 9 வயது முதல் அனைத்து சிறுமிகளும் பொதுவெளியில் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அவர்கள் ஹிஜாப் அணியவில்லை என்றால் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. மேலும், ஹிஜாப் அணிவதைக் கண்காணிக்க ஈரான் அரசு தனியாக காஸ்த் எர்ஷாத் என்ற கலாச்சார காவலர்களையும் கூட வைத்திருந்தனர். தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபடும் இந்த கலாச்சார காவலர்கள் ஹிஜாப் அணியாத பெண்களுக்கு கடும் தண்டனை கொடுப்பார்கள்.

அப்படித்தான் கடந்த செப். 13ஆம் தேதி குர்திஸ்தான் மாகாணத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண்ணை முறையாக ஹிஜாப் அணியவில்லை எனப் பிடித்துள்ளனர். உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை, முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்தனர். காவலில் அந்தப் பெண்ணை கலாச்சார காவலர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அந்தப் பெண் கோமா நிலைக்குச் சென்றார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அந்த பெண் வெறும் 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஈரான் நாடு முழுக்க கொந்தளிக்கச் செய்தது. ஹிஜாப் சட்டங்களை நீக்கக் கோரியும் கலாச்சார காவலர்களை அகற்றக்கோரியும் ஈரான் நாட்டில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த செப். மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கிப் பல உலக பிரபலங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பெண்கள் மட்டுமின்றி அங்குள்ள ஆண்களும் கூட ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கினர். கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் கலந்து கொண்ட ஈரான் அணியினர் ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தேசிய கீதம் பாடுவதையும் கூட புறக்கணித்தனர். இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணோர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த மெகா போராட்டத்தில் ஈரான் அரசு கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக இதைப் போராட்டமே இல்லை கலவரம் என்றும், வன்முறை என்றுமே அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்தது.

மக்களிடையே எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இப்போது ஈரான் அரசு ஒரு வழியாகப் போராட்டத்திற்குப் பணிந்துள்ளது. அங்குள்ள ஹிஜாப் விதிகளில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள கலாச்சார காவலர்கள் பிரிவை அகற்றுவதாக ஈரான் அட்டர்னி ஜெனரல் முகமது ஜாபர் மொண்டசெரி அறிவித்துள்ளார். கலாச்சார காவலர்களுக்கும் சட்டத்துறைக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய அவர், அந்தப் பிரிவை அகற்றுவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மொண்டசெரி, “ஈரான் நாட்டில் உள்ள ஆடை விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அரசும் சட்டத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறி இருந்தார். அவர் இந்தக் கருத்தைக் கூறிய சில நாட்களில் கலாச்சார காவல் பிரிவே கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1979இல் அங்கிருந்த அமெரிக்க ஆதரவு தூக்கியேறியப்பட்டு ஈரான் இஸ்லாமிய குடியரசு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அங்கு பொது இடங்களில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. அப்போது இருந்த காவலர்கள் ஹிஜாப் அணியாத பெண்களை எச்சரிக்கை மட்டும் செய்வார்கள். ஆனால், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கலாச்சார காவலர்கள் ஹிஜாப் குறித்து ஆராயத் தனியாக ரோந்து பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினர். அப்போதில் இருந்து தான் பெண்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்தன. இந்தாண்டு உயிரிழந்த மாஷா அமினி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஈரானில் இப்போது கலாச்சார காவலர்கள் பிரிவு அகற்றப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஹிஜாப் விதிகளிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.