ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பாகிஸ்தான் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மீது கடந்த வெள்ளிக்கிழமை சிலா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ பிரிவைச் சோ்ந்த வீரா் ஒருவா் காயமடைந்தாா். தூதா் உபைத்-உா்-ரஹ்மான் காயமின்றி தப்பினாா். ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் நாட்டில் தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் அண்மைக்காலமாக குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பின் ஆப்கானிஸ்தான் கிளையான ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் தூதரைக் குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பது ஐ.எஸ். அமைப்புதானா என்பதை உறுதிப்படுத்த முயன்று வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்லாமாபாதுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அழைத்து காபூல் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தனது கண்டனத்தை தெரிவித்தது. பாகிஸ்தான் தூதா் மீதான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தக்கீ கண்டனம் தெரிவித்துள்ளாா்.