குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம்: அதிமுகவினர் உறுதிமொழி!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க.வினர் 4 அணிகளாக தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள். அப்போது, “குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம்” என்று உறுதிமொழி ஏற்றனர். இதில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, தளவாய்சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், வெங்கடேஷ்பாபு, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலா ளர்கள் இ.சி.சேகர், மலர்மன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி உறுதிமொழியை வாசிக்க, கட்சி தொண்டர்கள் அதை திரும்ப சொன்னார்கள். உறுதிமொழியின் போது எடப்பாடி பழனிசாமி, ‘அம்மா மறைந்த நாளில் என்பதற்கு பதிலாக, ”அம்மா மறைந்த இந்நன்னாளில்” என்று கவனமில்லாமல் கூற, தொண்டர்களும் அதை அப்படியே திரும்ப சொன்னார்கள். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து உறுதிமொழியை வாசித்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறினார்:-

இதய தெய்வம் அம்மாவின் வழியில் தொடர்ந்து பயணிப்போம். தடு மாறாது தடம் மாறாது என்ற லட்சியத்தோடு வீர நடை போடுவோம். எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளை தூள்தூளாக்குவோம் என்று வீர சபதம் ஏற்போம்.

இந்திய அரசியலின் வரலாற்றாய் வாழ்ந்து எவரும் தொட முடியாத வானமாய் வாழ்ந்து தமிழக அரசியலின் வரலாற்றில் நிகரில்லா வெற்றிகளை தந்த நம் தங்க தலைவி.

தமிழினத்தின் தன்மானம் காக்க துரோகிகளையும், எதிரிகளையும் வென்றெடுத்த வெற்றி மங்கை. தாய்குலத்தின் துயர் துடைத்த கருணை மிகு தெய்வம். எதிரியின் வியூகத்தை உடைத்தெறிந்து வீரத்தோடு திகழ்ந்த வீரமங்கை. தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்திட்ட நம்முடைய நாடி நரம்பில் கலந்திட்ட நம் அம்மா மறைந்த இந்நன்னாளில் தொண்டர் படைபலம் ஆர்ப்பரிக்க, கடமை தவறாத உடன்பிறப்புக்கள் வீர சபதம் ஏற்க குவிந்திட்ட கொள்கை வீரர்களே, வீராங்கனைகளே வாரீர், வாரீர்” என்று எடப்பாடி பழனிசாமி இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். “அதிமுக தலைவரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை வகுத்துத் தந்தவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதனை நிறைவேற்றிவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்த விதியை சதியை துணையாகக் கொண்டு தன்னலத்திற்காக மாற்றியுள்ள சர்வாதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த வழியில் தொண்டர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீட்டெடுத்து சர்வாதிகார போக்கிற்கு முடிவு கட்டுவோம் என சபதம் ஏற்கிறோம்.

தம் மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காமல் இருக்க ஆயுளை அர்ப்பணித்த, மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற மந்திர மொழியை தன் வாழ்நாள் பிரகடனமாக ஆக்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்திய ஆட்சியை மீண்டும் அமைக்க சபதம் ஏற்போம்.

பெண்ணின வளர்ச்சியே சமூக வளர்ச்சி என்று இலக்காகக் கொண்டு மிதிவண்டி, தாலிக்கு தங்கம், விலையில்லா அரிசி, பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார். ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் திமுக அரசு அவற்றை ரத்து செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அதே வேளையில் ஜெயலலிதாவின் கருணை மிக்க ஆட்சியை திரும்பிக் கொண்டு வர உறுதியேற்கிறோம்.

மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற கொள்கையினால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக மக்களவை உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து தமிழக உரிமைகளை பெற்று வருவதில் ஜெயலலிதா மாபெரும் வெற்றி கண்டார். அந்த வழியில் வருகின்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற கடுமையாக களப் பணியை தொடங்குவோம். ஆளுமை, மதி நுட்பம், சீரிய திட்டங்களால் அதிமுக தொண்டர்களை ஓரணி திரட்டி ஒற்றுமை பறைசாற்றி பல வெற்றிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுக் கொடுத்தார். அவ்வழியில் நாமும் பயணித்து வெற்றி பாதையில் அதிமுகவை அழைத்துச் செல்வோம் என உறுதி ஏற்கிறோம்” என்று கூறி உறுதிமொழி ஏற்றனர். சசிகலா, டிடிவி தினகரனும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.