குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை: வெங்கையாநாயுடு

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க சீர்திருத்தம் தேவை என சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார்.

இந்தியாவின் 13-வது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கையா நாயுடுவுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாராட்டு விழா நடந்தது. மத்திய மந்திரி எல்.முருகன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து வெங்கையாநாயுடு பேசியதாவது:-

நாட்டில் அரசியல், நீதித்துறை, கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். அதிலும், குறிப்பாக நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் முறை கூடாது. அதேவேளையில் அரசும் நீதிபதிகளை நியமனம் செய்யக்கூடாது. இதற்காக நீதித்துறை ஆணையம் என ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக விரிவான விவாதம் தேவைப்படுகிறது.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தத்தை கொண்டுவர வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களின் வழக்குகள் நீண்டகாலமாக கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அவர்கள் பதவியில் இருந்து கொண்டு அனைத்து பலன்களையும் அனுபவித்த பின்புதான் அந்த வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது. எனவே, இதுபோன்ற வழக்குகளுக்காக சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும். 2009-ம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் கூட தற்போது வரை நிலுவையில் இருப்பது அவமானத்துக்கு உரியது.

ஒவ்வொருவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தாய் மொழியிலேயே பேச வேண்டும். எல்லா மொழியும் தேசிய மொழிதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த மொழியையும் திணிப்பது தவறு. மொழி திணிப்பிற்கு எதிரானவன் நான். தமிழ்மொழியும் தேசிய மொழிதான். தமிழ்நாட்டில் உள்ள வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காலனி ஆதிக்கத்தில் இருந்த கல்வி முறையை முடிவுக்கு கொண்டு வந்து புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேரவையின் மாண்பை காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேச வேண்டும். ஜனநாயகத்தை காக்கும் வகையில் தங்களது கருத்துக்களை நியாயமான முறையில் எடுத்துரைக்க வேண்டும். உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்ய வேண்டுமே தவிர, கூச்சல் குழப்பத்தில் ஈடுபடக்கூடாது. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தற்போது வரை நிலுவையில் உள்ளது. ஆண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காது என அதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்னிடம் முறையிட்டனர். இதனை மேலும் தாமதம் செய்யாமல், இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.