அதிமுக உட்கட்சி மோதல் இன்னும் ஒரு முடிவை எட்டாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 30ஆம் தேதிக்கு இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கினுடைய விசாரணை டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்ற விசாரணை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வில், முறையிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி, “பொதுக்குழு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்பதால்தான் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஏன் விசாரணை 6ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது? இதனால் கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், “வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பினருடைய கோரிக்கைகளையும் நிராகரித்த நீதிபதிகள், “உச்ச நீதிமன்றத்தின் நிர்வாக காரணங்களுக்காக வழக்கினுடைய விசாரணை டிசம்பர் 6ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது” என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.